மதுரை: விக்கிரவாண்டியில் இம்மாதம் நடைபெற இருக்கும் தவெக கட்சி மாநாட்டுக்கு வரவேற்கும் விதமாக மதுரையில் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து மக்களை அழைத்தனர் அக்கட்சியின் நிர்வாகிகள்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவருமான விஜய் தலைமையில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடக்கிறது.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை இலக்கு வைத்து நடக்கும் இந்த மாநாடு பிற அரசியல் கட்சியினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், மதுரை மாநகர தெற்கு மாவட்ட தொண்டரணி சார்பில், தவெக மாநாட்டுக்கு பொதுமக்களை வரவேற்று வித்தியாசமான அழைப்பிதழ்களை துண்டு பிரசுரமாக அக்கட்சியினர் வழங்குகின்றனர்.
மக்களுக்கு விடியல் வேண்டியும் , விக்கிரவாண்டி முதல் மாநில மாநாடு வெற்றி பெற வேண்டியும் மதுரை பாண்டி கோயில் சிறப்பு வேண்டுதலில் விஜய் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) ஈடுபட்டனர்.
அப்போது, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அழைப்பிதழுடன் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து மாநாடுக்கு அழைப்பு விடுத்தனர். அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினருக்கும் அழைப்பிதழ் கொடுத்தனர். மதுரையில் விஜய் கட்சியினரின் இந்த அழைப்பை மக்கள் வித்தியாசமாக பார்த்தனர்.

