தமிழ்த்தாய் வாழ்த்து: சட்டமன்றத்தில் தீர்மானம்

தமிழ்த்தாய் வாழ்த்து: சட்டமன்றத்தில் தீர்மானம்

2 mins read
0585ca6e-a533-4eb9-8ca9-878366ae2429
அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முதலில் பாடப்பட வேண்டும் எனத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் பொது அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில், அவை தொடங்குவதற்கு முன்பு முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழகச் சட்டமன்றத்தில் அரசு தனித் தீர்மானம் ஒன்றைத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) கொண்டுவந்தது.

மனோன்மணியம் சுந்தரனாரால் 1891ல் ‘மனோன்மணியம்’ என்ற நாடக நூல் எழுதப்பட்டது. அதிலிருந்து உருவாக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தை 1970 நவம்பர் 23ஆம் தேதி முதல் அரசு விழாக்களில் முதலில் பாட வேண்டும் என அப்போது அரசாணை வெளியிடப்பட்டது.

அன்று முதல் இந்த உத்தரவு நடைமுறையில் உள்ளது. கடந்த 2021 டிசம்பர் 12ஆம் தேதி முதல் மாநிலப் பாடலாக அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அமைந்துள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் எனத் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முதலில் பாடப்பட வேண்டும் எனத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் விஜய் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், உலகில் தோன்றிய பல மொழிகள் காலப்போக்கில் அழிந்துவிட்டதாகவும் தமிழ்மொழி மட்டுமே காலங்காலமாக நிலைத்து நிற்பதாகவும் குறிப்பிட்டார்.

“தமிழில் பல்லாயிரம் ஆண்டுகளாக இலக்கணம், இலக்கியம் எல்லாம் உள்ளது. நம் பெருமையைச் சொல்வதற்கு இத்தனை பெருமைகளைக் கொண்ட தமிழ் மொழியின் அடையாளம்தான் தமிழ்த்தாய் வாழ்த்து. ஒட்டுமொத்த இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப்பேசும் தமிழ்த்தாய் வாழ்த்து, நம் தமிழகத்தில் முதல் இடத்தில் இருக்க வேண்டும்.

“நம் அரசியல் சாசனமே ஒவ்வொரு மாநிலத்தின் மொழிக்கும் பண்பாட்டுக்கும் பாரம்பரியத்துக்கும் உரிமையைக் கொடுத்துள்ளது. அந்த உரிமையின் அடிப்படையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அதுதான் மாநில உரிமை,” என்றார் விஜய்.

தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தையும் தமிழின் தொன்மையும் தமிழர் பண்பாட்டின் பெருமையையும் பாதுகாக்கும் இந்த உயரிய பணியில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேறுபாடுகளை மறந்து தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவு நல்க வேண்டும் என்று விஜய் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்