கோவை: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தின் மூலம் ரூ.50 லட்சம் மோசடி செய்த ஆடவர் கோவை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜகணேஷ், 30, என்ற அந்த ஆடவர், செல்வபுரம் கல்லாமேடு பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன், 35, என்பவரிடம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் பல லட்சம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டியுள்ளார்.
இதன் மூலம் ரூ.4.2 லட்சம் வசூலித்து தம்மை ஏமாற்றிவிட்டதாக அர்ஜுனன் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் ராஜகணேஷ் கைதானார்.
விசாரணையின்போது, அவர் மேலும் பலரை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும் அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு சொந்தமாக நிலம் வாங்கியதும் தெரியவந்தது.
மேலும், ராஜகணேஷ் வங்கிக் கணக்கில் ரூ.46 லட்சம் இருப்பதாகக் குறிப்பிட்ட காவல்துறையினர், அவரது வீட்டிலிருந்து ரூ.2.35 லட்சம் ரொக்கம், சொகுசு கார், கைப்பேசிகள், மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.