சென்னை: அரிய உலோகங்களில் ஒன்றான இரிடியத்தில் முதலீடு செய்தால், நிறைய லாபம் கிடைக்கும் என்று கூறி, பலரை மோசடி செய்த வழக்கில் மேலும் 24 பேர் கைதாகினர்.
இரிடியத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பல்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரைப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் சில அறக்கட்டளைகளைத் துவங்கின.
அறக்கட்டளை மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றங்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்பதால் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மோசடி கும்பல்களை நம்பி தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பணம் செலுத்தியதை அடுத்து, ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரிசர்வ் வங்கி, காவல்துறையின் சிபிசிஐடி பிரிவில் புகார் அளித்தது. அதன் பேரில், பண மோசடி தொடர்பாக 20 வழக்குகள் பதிவாகின.
இதையடுத்து, 47 இடங்களில் அதிரடிச் சோதனை நடத்திய காவல்துறை, முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றியது. மேலும், 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடியில் முக்கியப் பங்கு வகித்த சாமிநாதன் என்பவரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்தபோது, அவர் பல்வேறு தகவல்களைக் கூறியதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் மேலும் 24 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சென்னை, மதுரை, திண்டுக்கல், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 54 பேர் கைதாகி உள்ளனர்.