சென்னை: ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆண்டுக்கு 1,000 பேரை சேர்க்க அந்த அமைப்பு இலக்கு கொண்டுள்ளது என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் அளித்த வாக்குமூலம் வழி இது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து, என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 18 பேரைக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களில், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபு ஹனீபா, 33; பவாஸ் ரஹ்மான், 36; சரண், 25, ஆகியோரை, மூன்று நாள்கள் காவலில் எடுத்து, என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அதில், அபு ஹனீபா என்பவர் அளித்த வாக்குமூலத்தில், “இலங்கையில், 2019ல் ஈஸ்டர் நாளில், சர்ச் உள்ளிட்ட இடங்களில், தொடர் குண்டு வெடிப்பு நடத்திய, ஐஎஸ் பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் தலைமையில் செயல்பட்டு வந்தோம். எங்களுக்கு சஹ்ரான் ஹாசிம், சென்னை மண்ணடி மற்றும் கோவையில் ரகசிய பயிற்சி அளித்தார். அவருக்கு அடுத்த நிலையில், ஜமேஷா முபின் செயல்பட்டு வந்தார்.
“அவர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் எங்களுக்கு துப்பாக்கி சுடுதல் மற்றும் வெடிகுண்டுத் தயாரிப்புப் பயிற்சி அளித்தார். எங்களுக்குள் தகவல் பரிமாற்றம் சங்கேத மொழியில் நடந்து வந்தது.
“கேரள மாநிலம் மற்றும் கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உடற்பயிற்சிக் கூடங்கள், அரபுக் கல்லுாரிகளை, ஆயுத பயிற்சி அளிக்கும் இடமாக பயன்படுத்தி வந்தோம். ஆண்டுக்கு 1,000 பேரையாவது ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்க வேண்டும் என, சஹ்ரான் ஹாசிம் இலக்கு நிர்ணயித்து இருந்தார். அதற்கான பணிகளை முழுவீச்சில் கவனித்து வந்தோம்.
“எங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட இளையர்கள், வேறு சில பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தனர். இதனால், எங்களின் எதிரி பட்டியலில் இடம்பெற்றனர். கோவை ஈஸ்வரன் கோவிலை தகர்த்து, எங்கள் முதல் வெற்றியாக கொண்டாட இருந்தோம்; அது தோல்வியில் முடிந்துவிட்டது,” என்று கூறியுள்ளார்.