சமையல் முதல் தகனம் வரை ‘எரி’யும் விவகாரம்

சமையல் முதல் தகனம் வரை ‘எரி’யும் விவகாரம்

4 mins read
fd031658-2a38-411b-b782-d6d81f6a56c0
திரு ராஜ்குமார். - படம்: ராஜ்குமார்
multi-img1 of 3

அமெரிக்கா முதல் அமைந்தகரைவரை எங்கு திரும்பினாலும், யாரைப் பார்த்தாலும் ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்துத்தான் பேச்சு.

போரால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவு இன்னும் சரியாகத் தெரியவில்லை. எனினும், சாமானியர்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறி ஆகியுள்ளது.

பெட்ரோல், சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு பூதாகரமாகி வருகிறது. ஒருபக்கம் வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடைப்பது சிரமம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், சமைப்பதற்கு எரிவாயுக் கலன் இல்லை என்கின்றனர்.

ஒரு பக்கம் விறகு, மின்சார அடுப்புக்கு மவுசு கூடியுள்ளது எனில், மறுபக்கம் பதுக்கல்காரர்களுக்கு யோகம் அதிகரித்துள்ளது.

சென்னை மாநகரத்தின் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் வாகனங்களின் வரிசை நீள்கின்றன. 20 லிட்டர் கொள்முதல் கொண்ட கேன்களைச் சுமந்தபடி, கடும் வெயிலில் வரிசையில் காத்திருப்பவர்களையும் காண முடிகிறது.

‘கொவிட்-19’ போன்ற நெருக்கடிநிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் பெட்ரோலையும் சமையல் எரிவாயுக் கலன்களையும் மக்கள் தேவைக்கு அதிகமாக வாங்கி வருகின்றனர்.

தேவைக்கு அதிகமான முக்கியப் பொருள்களை வாங்கிக் குவிப்பதும் ஒருவகையில் பதுக்கல்தான் என்றார்கள் அதிகாரிகள். ஆனால், அதைக் கேட்பார் யாரும் இல்லை.

மனிதனின் முதல் எதிரி அச்சம். இதற்கு சென்னைவாசிகள் ஆட்பட்டுள்ளதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

இந்நிலையில், உண்மை நிலவரத்தை அறிய தமிழ் முரசு களமிறங்கியது.

வாடிக்கையாளர்களை நினைத்துக் கவலைப்படுகிறேன்: தேவகி

“கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் உணவு விநியோகத்தில் (கேட்டரிங்) ஈடுபட்டுள்ளேன். பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் முதியவர்களுக்கும் உணவு அளிப்பதை ஒரு சேவையாகவே செய்து வருகிறேன்.

“கடந்த நான்கைந்து நாள்களாக சமையல் எரிவாயு உருளை கிடைக்கவில்லை. பெரிய உணவகங்களுக்கு எளிதில் கிடைக்கும் பொருள்கள் எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு கிடைப்பதில்லை.

“எனது சமையல்கூடம் அமைந்துள்ள வாடகைக் கட்டடத்தில் விறகு அடுப்பு வைத்து சமைக்க அனுமதிக்க உரிமையாளர் மறுத்துவிட்டார்.

“எனது உணவுக்காகக் காத்திருக்கும் நோயாளிகளையும் முதியோரையும் நினைத்தால் கவலையாக உள்ளது.

“நேற்று அருகே உள்ள தேநீர்க் கடையில் அனுமதி பெற்று சில உணவுகளைச் சமைத்து உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்தேன். கூடிய விரைவில் எல்லாம் நல்லவிதமாக நடந்தால் நிம்மதியாக இருக்கும்,” என்றார் திருமதி தேவகி.

ஒரு சிலிண்டர் விலை ரூ.5,000: நவ பிரகாஷ்

“முன்பு ரூ.1,500க்கு விற்கப்பட்ட ஒரு சமையல் எரிவாயுக் கலனின் விலை தற்போது ரூ.5,000 ஆகிவிட்டது.

அரசு நிறுவனங்களின் எரிவாயு விநியோகம் முற்றிலும் நின்றுவிட்டது. தனியார் முகவர்கள்தான் அதிக விலைக்கு விற்கிறார்கள். வேறு வழியில்லாமல் அவற்றை வாங்கி தொழிலை நடத்துகிறோம்.

“ஐந்து கலன்கள் வாங்கினால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதற்காக உணவுகளின் விலையை நாங்களும் கண்டபடி ஏற்றிவிட முடியாது. வாடிக்கையாளர்களின் நலன், ஊழியர்களின் நலன் எனப் பல்வேறு விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது.

“போதுமான கையிருப்பு இல்லாதபோது அரசாங்கத்தை மட்டும் குறைசொல்லி என்ன பயன்?” என்று ஆதங்கப்பட்டார் சென்னை மதனந்தபுரத்தில் உணவகம் நடத்திவரும் திரு நவ பிரகாஷ்.

பிரச்சினையை வளர்க்கிறார்கள்: இரா.ராஜ்குமார்

இது உலகளாவிய பிரச்சினை என்பதால் ஓர் அரசாங்கத்தை மட்டும் குறைசொல்லி பயனில்லை என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைமைச் செயலாளரும் தமிழக உணவகச் சங்கத்தின் செயலாளருமான பேராசிரியர் திரு இரா.ராஜ்குமார்.

“ஊடகங்கள்தான் நிலைமையைப் பூதாகரமாக்கி மக்களைத் தவறாக வழிநடத்துகின்றன. மக்கள் ஊடகங்களில் வரும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளைப் பார்த்து குழம்பி நிலைகுலைந்து போய்விடுகிறார்கள். அதன் எதிரொலியாகவே கடந்த இரு நாள்களாகச் சென்னையில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இது தேவையற்றது.

“பொதுமக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழி இருந்தால் எந்த அரசாங்கமும் அதை நிச்சயம் பரிசீலிக்கும். சிக்கலை முடிவுக்குக் கொண்டுவரும். எனவே, ஊடகங்களும் மற்ற தரப்பினரும் இந்தப் பிரச்சினையை அரசியலாக்காமல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,” என்றார் திரு இரா.ராஜ்குமார்.

மக்களின் அச்சம் நீங்கவில்லை: அருண்

“தமிழகத்தில் இதுவரை 15% உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. கள்ளச்சந்தையில் ஒரு சமையல் எரிவாயுக் கலன் 6,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

“மத்திய, மாநில அரசுகள் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் கூறிவந்தாலும் மக்கள் மத்தியில் அச்சம் முழுமையாக நீங்கவில்லை.

“எந்த பெட்ரோல் நிலையத்திலும் வாடிக்கையாளர்களிடம் பெட்ரோல் இல்லை என்று யாரும் கூறியதாக செய்தி வெளிவராத நிலையில், தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுவது சரியல்ல. அதேசமயம், பல்வேறு இடங்களில் மக்கள் ஓரளவேனும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் உண்மைதான்.

“இதுவரை எனது நிறுவனத்தை நடத்துவதில் எந்தச் சிக்கலும் வரவில்லை. ஆனால் ஈரான், இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வருவதால் எனக்கும்கூட கவலை ஏற்படுகிறது,” என்றார் தொழில் முனைவோர்களில் ஒருவரான திரு அருண்.

உணவுத் தேவைக்கான எரிவாயுத் தட்டுப்பாடு என்பதைக் கடந்து, மின்மயானத்திலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

மதுரையில் கீரைத்துறை, தத்தனேரி, மூலக்கரை உட்பட ஒன்பது எரிவாயு மின் மயானங்கள் உள்ளன. அவற்றில் 47 கிலோ எரிவாயுக் கலன்களைக் கொண்டு உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக, சுடுகாடுகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

எனினும், மின் மயான நிர்வாகத் தரப்பு இதை மறுத்துள்ளது.

அடுத்த மூன்று வாரங்களுக்குத் தேவையான எரிவாயு இருப்பு இருப்பதாக நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்