கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்

திருப்பரங்குன்றத்தில் பதற்றம்; உச்ச நீதிமன்றத்தை அணுகிய தமிழக அரசு

2 mins read
5843ecc3-5dd9-4538-b282-50391eff815a
உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள பகுதியில் வழக்கமாக காத்திகை தீபம் ஏற்றப்படும். - கோப்புப் படம்: ஊடகம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் காரணமாக, அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகையின்போது தீபம் ஏற்றப்படும். இந்நிலையில், அங்குள்ள தீபத்தூணில்தான் முறையாக தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும் இதற்கு உத்தரவிடக் கோரியும் இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிகுமார் உள்ளிட்ட சிலர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தனர்.

அதை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சி வரை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பின்னர் உரிய இடத்தில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, தமிழக அறநிலையத்துறை இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. ஆனால், அம்மனு ஏற்கப்படவில்லை.

இதனிடையே, மனுதாரர்கள் ராம ரவிகுமார் உள்ளிட்ட பத்துப் பேர் கொண்ட மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபம் ஏற்ற நீதிபதி அனுமதி வழங்கி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு நீதிமன்ற உத்தரவின்படி, மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற முயன்றவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவலர்கள் சிலர் காயமடைந்ததை அடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி ஒருதரப்பும் அரசின் கொள்கை முடிவை அமல்படுத்த மற்றொரு தரப்பும் முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

எனவே, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்க மலைப்பாதை முன், சாலையில் தீபம் ஏற்றிய பின்னர் ராம ரவிகுமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே, இரண்டாம் நாளான நவம்பர் 4ஆம் தேதி, நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

அப்போது திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை ரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இத்தகவலை அறிந்த ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். ஆனால் 144 தடை உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதால் யாரையும் தீபம் ஏற்ற அனுமதிக்க இயலாது என்று மதுரை மாநகர ஆணையர் லோகநாதன் அறிவித்தார்.

இதனால் மீண்டும் பதற்றம் நிலவியது. தடை உத்தரவை மீறி கூட்டமாக் கூடியதாகக் கூறி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்தது. திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தங்கள் தரப்பும் நீதிமன்றத்தை நாடும் என இந்து தமிழர் கட்சித்தலைவர் ராம ரவிகுமார் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்