தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈரோட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

1 mins read
ce2f38e8-4873-4915-a6a3-d4c986f61757
ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், கோபி, முடக்குறிச்சி சாலைகள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். - படம்: தமிழக ஊடகம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்றும் அதற்கான இடம் தேர்வுசெய்யப்பட்டு, பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஈரோடு புதிய பேருந்து நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 20) நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளையும் புதிய திட்டப்பணிகளையும் தொடங்கிவைத்தார்.

அப்போது உரையாற்றிய திரு ஸ்டாலின், “ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், கோபி, முடக்குறிச்சி சாலைகள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும். சத்தியமங்கலம், நம்பியூர், பவானிசாகர் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் ரூ.12 கோடியில் மேம்படுத்தப்படும். வாடகைக் கட்டடத்தில் இயங்கும் துணைச் சுகாதார நிலையங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும். சென்னிமலை உள்ளிட்ட 50 கிராமங்களில் ரூ.15 கோடி செலவில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மேம்படுத்தப்படும். திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் சென்னிமலையில் அவரது நினைவு மண்டபம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்,” என்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.

நிகழ்ச்சியின்போது, 50 ஆயிரத்து 88 பேருக்கு ரூ.284 கோடியே 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் ரூ.951 கோடியே 20 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 559 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்ததுடன், ரூ.133 கோடியே 66 லட்சம் மதிப்பில் 222 புதிய திட்டங்களுக்கும் திரு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

குறிப்புச் சொற்கள்