சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாஃபர் சாதிக்கின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சொந்தமான சொகுசு பங்களா, கார்கள், தங்குவிடுதி என 56 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடிக்கி உள்ளதாக மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார் ஜாஃபர் சாதிக்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் ஜாஃபர் சாதிக் 7 சொகுசு கார்களை வாங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தன் சகோதரர்கள், கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜாஃபர் சாதிக் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், அந்த கும்பலின் தலைவனாக செயல்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஜாஃபர் சாதிக் மட்டுமின்றி, அவரது மனைவி அமீனா பானு, சகோதரர்கள் ஆகியோரும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.