கோயம்புத்தூர்: தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (மே 13) தீர்ப்பளித்தது.
தண்டனை விவரம்
ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு (30 வயது) 4 ஆயுள் தண்டனையும், திருநாவுக்கரசுக்கும் (30 வயது) ஐந்தாவது குற்றவாளி மணிவண்ணனுக்கும் (30 வயது) தலா 5 ஆயுள் தண்டனையும், மூன்றாவது குற்றவாளி சதீசுக்கு (33 வயது) 3 ஆயுள் தண்டனையும், 6வது குற்றவாளி பாபு (38 வயது), 8வது குற்றவாளி அருளானந்தம் (38 வயது) மற்றும் 9வது குற்றவாளி அருண்குமார் (36 வயது) ஆகியோருக்கு தலா ஓர் ஆயுள் தண்டனையும், குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், ஹரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனையும் பிறப்பித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் 9 பேர்மீது 76 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் 66 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளன.
இழப்பீடு
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை அரசியல் கட்சிகளும் தொண்டூழிய அமைப்புகள், தனிப்பட்ட மனிதர்கள் எனப் பலரும் வரவேற்றுள்ளனர். இருந்தும் இதுபோன்ற வழக்குகளை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்காமல் 90 நாள்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் 50க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் இந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வெளியானது.
தொடர்புடைய செய்திகள்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஆபாசமாகக் காணொளி எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்தது. அதில், பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறி அழும் ஒலிப்பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவின. இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி நகர காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. அதன்பிறகு இந்த வழக்கை சிபிஐ கையிலெடுத்தது. அதன் தொடர்பில் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த கொடூரச் சம்பவங்களை முழுமையாக விசாரித்து சிபிஐ தரப்பில் 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் பாதிக்கப்பட்ட 8 பெண்கள் நேரடியாக வந்து சாட்சியம் அளித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 2023 பிப்ரவரி 24ஆம் தேதி சாட்சி விசாரணை தொடங்கிய இவ்வழக்கில் இப்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
“இந்த வழக்கின் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடம். இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்கக் கூடாது. குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்தாலும், இந்தத் தண்டனையே உறுதிசெய்யப்படும் என நம்புகிறேன்,” என்று சிபிஐ சார்பில் வாதாடிய சிறப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்தார்.