தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் களைகட்டும் ஏறுதழுவுதல்: வெற்றிபெறும் காளைக்கு டிராக்டர், வீரருக்கு கார் பரிசு

2 mins read
02116707-8878-4536-953d-e7452e9f724a
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி. - படம்: தமிழக ஊடகம்
multi-img1 of 2

அவனியாபுரம்: தமிழ்நாட்டின் மதுரையில் உலகப் புகழ்பெற்ற மூன்று நாள் ஜல்லிக்கட்டு என்ற ஏறுதழுவுதல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தைத்திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

பொங்கல் பண்டிகை தினமான செவ்வாய்க்கிழமை அன்று (ஜனவரி 14) அவனியாபுரத்திலும் மாட்டுப் பொங்கல் தினமான புதன்கிழமை (ஜனவரி 15) பாலமேட்டிலும், நாளை மறுநாளான வியாழக்கிழமை (ஜனவரி 16) அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்து இப்போட்டிகள் நடைபெற உள்ளன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும் 900 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

சிறந்த காளைக்கு ரூ.11 லட்சம் மதிப்புள்ள டிராக்டரும், சிறந்த காளையை அடக்கும் வீரருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள நிசான் காரும் பரிசு அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அறிவித்துள்ளனர்.

அத்துடன், அவனியாபுர மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 2,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் ஆறு பேர், மாடு உரிமையாளர் ஐந்து பேர், பார்வையாளர் ஒருவரும் காயம் அடைந்துள்ளனர்.

பல சுற்றுகளாக நடக்கும் இப்போட்டியில் மல்லுகட்டி முடிவில் வெற்றிபெறும் சிறந்த காளைக்கு ரூ.11 லட்சம் மதிப்புள்ள ஒரு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஒரு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு விழாக் குழுவினரின் சார்பாக குத்துவிளக்கு, அண்டா, கட்டில், பீரோ, சைக்கிள், தலையணை, மெத்தை, கைப்பேசி, தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

போட்டியில் காயமடையும் வீரர்களை உடனடியாக மீட்பதற்கு செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் 30க்கும் மேற்பட்டோர் வாடிவாசல் அருகே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை மேற்கொள்வதற்கு 50 மருத்துவர்கள், 60 தாதியர்கள் கொண்ட 5 மருத்துவக்குழுக்களும், 5க்கும் மேற்பட்ட அவசர ஊர்திகளும் தயார்நிலையில் உள்ளன.

காயப்படும் காளைகளை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு 20 கால்நடை மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதால், அவனியாபுரம் பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்