மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக மின்னிலக்கப் எண்பலகை வைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இவ்வாண்டுக்கான போட்டி வியாழக்கிழமை (ஜனவரி 15) அவனியாபுரத்தில் தொடங்கியது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டியில் உடற்தகுதிபெற்ற கிட்டத்தட்ட 1,100 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றுள்ளன.
போட்டியில் பங்கேற்ற காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு உரிய பரிசோதனைகள் நடத்தப்பட்டன. போட்டி நடக்கும் இடத்தில் இரண்டடுக்குப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
100 மருத்துவர்கள் கொண்ட குழுவும் 12 மருத்துவ வாகனங்களும் தயார் நிலையில் இருந்தன.
இந்த ஆண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு மற்ற மாவட்ட, மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்தனர்.
முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதன் பிறகு மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டதும் அவை துள்ளிக் குதித்துத் திமிறி ஓட, வீரர்கள் அவற்றின் திமிலைப் பிடித்து அடக்க முற்பட்டனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக, முதல் முறையாக இவ்வாண்டு வீரர்கள் பெற்ற புள்ளிகளைக் குறிக்கும் மின்னிலக்க எண்பலகை வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் போட்டி நிலவரம் குறித்து உடனுக்குடன் திரையில் தகவல்கள் இடம்பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
இதனால் போட்டியில் கூடுதல் சுவாரசியம் ஏற்பட்டதாகப் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
முதல் பரிசை வென்ற காளைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பாக காரும், துணை முதல்வர் உதயநிதி சார்பாக டிராக்டர் வாகனமும் பரிசாக வழங்கப்பட்டன.
இதேபோல் மாடுபிடி வீரருக்கும் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு தங்க காசுகள், இரு சக்கர வானங்கள், சைக்கிள், அண்டா, நிலைப்பேழை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு 2,300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவனியாபுரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குவிந்திருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
அவனியாபுரத்தை அடுத்து, வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) பாலமேட்டிலும் சனிக்கிழமை (ஜனவரி 17) அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.
பாலமேடு போட்டியைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் ஸ்டாலினும் தொடங்கி வைப்பர்.

