‘ஜனநாயகன்’ பட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை அணுகிய தயாரிப்பாளர்

2 mins read
e1dbf19d-bab2-4f61-b926-d5f28925bf28
விஜய். - படம்: அமேசான்.இன்

சென்னை: ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்புத் தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

தணிக்கை வாரியத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதி அமர்வில் முறையிட தயாரிப்புத் தரப்பு முடிவு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி ‘ஜனநாயகன்’ படத்தை ஜனவரி 9 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு இருந்தனர். எனினும், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.

இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

இதனால், தணிக்கை வாரியம் சார்பில் உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு, தணிக்கை வாரிய நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி விஜய் பட தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

விஜய்க்குப் பாதுகாப்பு

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஜனவரி 12) நடக்கவிருக்கும் விசாரணையில் தவெக தலைவர் விஜய் முன்னிலையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கரூரில் பொதுமக்கள், தவெக நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிஐ குழுவினர் விசாரணை நடத்தினர். அடுத்து விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சிபிஐ விசாரணைக்காகத் திங்கட்கிழமை காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி செல்கிறார். அங்கு லோதி எஸ்டேட் சாலையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் முன்னிலையாக உள்ளார். டெல்லி வரும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தவெக சார்பில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்