சென்னை: தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி, ‘ஜனநாயகன்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் அந்தப் படம் எப்போது வெளியீடு காணும் என்ற கேள்வி நீடிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசித் திரைப்படம் ஜனநாயகன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் தேதி இப்படம் திரைகாணவிருந்த நிலையில், தணிக்கை வாரியச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்புத்தரப்பு வழக்கு தொடுத்தது. இது தொடர்பான மனுவை விசாரித்த தனி நீதிபதி ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்த்த தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் கருத்துகள் அடிப்படையில் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்துத் தணிக்கை வாரியம், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் மேற்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதியை உள்ளடக்கிய அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்தது. மேலும், அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 21ஆம் தேதி தள்ளிவைத்தது.
இதையடுத்து, படத்தைத் தயாரித்துள்ள கேவிஎன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
அதே வேளையில், தங்கள் தரப்பு கருத்துகளைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என வலியுறுத்தி, மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ பட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் வியாழக்கிழமை (ஜனவரி 15) விசாரணைக்கு வந்தது.
அப்போது, தயாரிப்பாளர் தரப்பு உச்ச நீதிமன்றத்தை மிக வேகமாக அணுகியுள்ளது என்றும் உயர் நீதிமன்ற விசாரணை முடிவதற்குள் ஏன் இவ்வளவு அவசரம் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் எனத் தயாரிப்புத் தரப்பிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் இருப்பது முற்றிலும் தீய எண்ணத்துடன் கூடிய செயல்பாடு என்றும் குறித்த தேதியில் படம் வெளியாகவில்லை என்றால் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் தயாரிப்புத்தரப்பு வாதிட்டது.
ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதை ஏற்கவில்லை. இந்த வழக்கில் தற்போது தலையிடத் தாங்கள் விரும்பவில்லையென அவர்கள் கூறினர்.
தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதங்களை வைக்க முற்பட்டபோது, “மன்னிக்கவும். சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். உங்களுக்கு எதைச் சொல்ல வேண்டும் என்றாலும் அவர்களிடம் சென்று சொல்லுங்கள்,” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

