சென்னை: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது சென்னை காவல்துறை நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரான ஹெச்.ராஜா, கடந்த 7ஆம் தேதி அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லாவும் தேச விரோதிகள் என்றும் இருவரையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ஹெச்.ராஜாவின் இந்த பேட்டி வன்முறையைத் தூண்டும்விதமாக உள்ளது என்று மனித நேய மக்கள் கட்சி சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஹெச்.ராஜா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்காக குரல் கொடுத்த ஹெச்.ராஜா மீதான காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என பாஜக மாநிலச் செய்தி தொடர்பாளர் பிரசாத் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.