சென்னை: விவாகரத்து கோரிய ஜெயம் ரவி தமது மனைவி ஆர்த்தியை நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் பேசி உள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஜெயம் ரவி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தமது மனைவியைப் பிரிவதாக அறிக்கை வெளியிட்டார்.
தங்களது திருமணத்தை ரத்து செய்யக் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் அவர் அளித்திருந்தார்.
அந்த மனு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையைத் தொடர்ந்து, ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரிடையே சமரசத் தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
குடும்ப நல நீதிமன்ற உத்தரவையடுத்து ஜெயம் ரவியும் ஆர்த்தியும் சமரசத் தீர்வு மையத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 21) முன்னிலையாகி ஒரு மணி நேரத்திற்கும் மேல் மனம் விட்டுப் பேசியதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து வழக்கின் விசாரணை ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.