சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அணியும் உடை தொடர்பாக அவருக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
சேலையூரைச் சேர்ந்த சத்தியகுமார் எனப்படும் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜீன்ஸ் பேண்ட், டி.சர்ட் அணிந்து அரசு விழாக்களில் கலந்துகொள்கிறார்.
“அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அவர் இந்த மாநிலப் பிரதிநிதியாகத் திகழ்கிறார்.
“அப்படிப்பட்ட மதிப்புக்குரிய பதவியை வகித்துக்கொண்டு, இதுபோல சாதாரண உடைகளை அணியக்கூடாது.
“எனவே, 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி அரசு விழாக்களில் பங்கேற்கும்போது தமிழ் கலாசார மற்றும் முறையான உடைகளை அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.


