மகளைக் கரைசேர்க்க சேமித்த நகை: மீட்டுக் கொடுத்த துப்புரவு ஊழியர்

மகளைக் கரைசேர்க்க சேமித்த நகை: மீட்டுக் கொடுத்த துப்புரவு ஊழியர்

2 mins read
be2d2349-cdc9-4fe7-aa1e-5bdb5e653e16
துப்புரவு ஊழியர் துரைக்கும் அவரது மனைவிக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்த காவல் அதிகாரி. - படம்: நியூஸ் தமிழ்நாடு
multi-img1 of 2

திருவாரூர்: திருவாரூரில் மனிதாபிமானமும் நேர்மையும் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் தவறவிட்ட ஒரு குடும்பத்திற்கு, துப்புரவு ஊழியர் ஒருவர் நேர்மையின் அடையாளமாகத் திகழ்ந்து அந்த நகைகளை மீட்டுக் கொடுத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்கள் தங்கள் மகளின் திருமணத்திற்காகப் பல ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த 20 சவரன் தங்க நகைகளுடன் ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை, திருவாரூரில் உள்ள உறவினர் வீட்டில் பாதுகாப்பாக வைப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக, பயணத்தின்போது அந்த நகைகள் இருந்த பையைத் தவறவிட்டனர்.

மகளின் வாழ்வாதாரமே அந்தப் பையில்தான் இருக்கிறது என்ற நிலையில், அதைக் காணாமல் முத்துலட்சுமியின் குடும்பம் நிலைகுலைந்து போனது. பதற்றத்துடன் அவர்கள் நகையைத் தேடி அலைந்தனர்.

அப்போது, அந்தப் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த துரை என்பர, சாலையோரம் கிடந்த அந்தப் பையைக் கண்டெடுத்தார்.

உள்ளே பல லட்சம் மதிப்புள்ள தங்கமும் வெள்ளியும் இருப்பதைக் கண்ட அவர், சிறிதும் ஆசைப்படாமல் உடனடியாக அந்தப் பையை அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல்துறை மூலம் தகவல் அறிந்து அங்கு வந்த முத்துலட்சுமி, தனது மகளின் திருமண நகைகள் பத்திரமாக இருப்பதைக்கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

தன் குடும்பத்தின் வாழ்வு கேள்விக்குறியாகாமல் மீட்டுக் கொடுத்த திரு துரையின் நேர்மையைக் கண்டு வியந்த அந்தத் தாய், நெகிழ்ச்சியில் அவர் காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

“இக்காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா?” என அங்கிருந்த காவலர்களும் பொதுமக்களும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

திரு துரையின் இந்த உன்னதமான செயலைப் பாராட்டி, காவல் அதிகாரிகள் அவருக்குச் சிறப்புச் செய்து கௌரவித்தனர்.

வறுமையிலும் செம்மையாக வாழ்ந்து, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத திரு துரையின் நேர்மை குறித்த காணொளி தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு, பலரது இதயங்களையும் வென்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்