நடுத்தர மக்களை ஏமாற்றும் வேலை: நிதிநிலை அறிக்கை குறித்து கம்யூனிஸ்ட்

2 mins read
8efc82d9-f943-41f5-9b53-00b287e7c5f5
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்தியப் பொதுச் செயலாளர் து.ராஜா. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய மக்களுக்கு எதிராக உள்ளது. அப்படிப்பட்ட அறிக்கையை நாம் புறந்தள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்[Ϟ]திந்தியப் பொதுச் செயலாளர் து.ராஜா கூறியுள்ளார்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை சென்னை, பாரிமுனையில் நிதிநிலை அறிக்கை நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

அப்போராட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமை வகித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய பொதுச்செயலாளர் நிதிநிலை அறிக்கையின் நகலை எரித்துப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர், மத்திய அரசின் இந்த நிதிநிலை அறிக்கை ஏழை, எளியவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. நடுத்தர மக்களுக்கு ஆதரவளிக்கிறோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்.

இதுவரையிலும் இல்லாத அளவுக்கு இப்போது வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

பணவீக்கம் அதிகரித்துள்ளதோடு, இந்திய நாணயத்தின் மதிப்பு மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் உச்சத்தைத் தொட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை சீர்செய்யும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை ஒருவகையிலும் அணுகவில்லை. எனவே, இதைக் கண்டித்துதான் தமிழகம் முழுவதும் நிதிநிலை அறிக்கை நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறுகிறது என்றார் திரு டி.ராஜா.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வருவாய் அதிகளவில் மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால், தமிழக அரசுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைக் கேட்கும் போது அதை தர மத்திய அரசு மறுக்கிறது. அத்துடன், தமிழகத்துக்கு எதிராக பல்வேறு முடிவுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இது மக்களுக்கான நிதிநிலை அறிக்கை அல்ல. பெரும் நிறுவனங்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் சாதகமான நிதிநிலை அறிக்கை. எனவே, இந்த நிதிநிலை அறிக்கையை நாம் புறந்தள்ள வேண்டும். இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகள் இந்த நிதிநிலை அறிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளன.

மேலும், விண்வெளி ஆராய்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. காப்பீட்டுத் துறையில் கூட இன்றைக்கு 100 விழுக்காடு அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. அதற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசும்போது, மத்திய நிதியமைச்சர், விவசாயம் தான் வளர்ச்சியின் இயந்திரம் என்று கூறினார். ஆனால், இன்றைக்கு விவசாயிகள் படுமோசமான நிலையில் உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியோ, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்தார்.

ஆனால், விவசாயிகள், தங்கள் பொருள்களுக்குச் சட்டரீதியான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று நீண்ட காலமாகப் போராடி வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை. எனவேதான், இந்த நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து நிதிநிலை அறிக்கை நகல் எரிக்கும் போராட்டம் நடத்துகிறோம் என்றாா திரு ராஜா.

குறிப்புச் சொற்கள்