சென்னை: தமிழ்நாட்டில் ரூ.1,185 கோடியில் மகளிர் வேலைவாய்ப்பு, பாதுகாப்புத் திட்டத்திற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம், தமிழக அரசு செயல்படுத்தவுள்ள இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதி உதவியை உலக வங்கி வழங்கும்.
இந்தத் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, அவர்களின் பொருளியல் நிலையையும் மேம்படுத்த முடியும்.
உலக வங்கி இந்தியாவின் பொருளியல் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. குறிப்பாக, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அவ்வப்போது நிதி உதவி அளித்து வருகிறது. திறன் பயிற்சியும் வேலைவாய்ப்புகளும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இத்திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட 600,000 பெண்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 18,000 பெண்களுக்குச் சுயதொழில் தொடங்குவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் பெண்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும் மாநிலத்தின் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.