சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் ராஜ்பாபு, 52. அவர் கடந்த 2018ஆம் ஆண்டு முத்தரசன் என்பவரிடம் தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தூண்டில் போட்டார்.
அவரது வார்த்தைகளை நம்பிய முத்தரசன், அவரிடம் ரூ.2.5 லட்சம் பணமும் கொடுத்தார்.
பின்னர், தனக்குத் தெரிந்த வேறு சிலரையும் ராஜ்பாபுவிடம் அறிமுகப்படுத்திய முத்தரசன், அவர்களுக்கும் வேலை பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மேலும் ஒன்பது பேர் ஆளுக்கு இரண்டரை லட்ச ரூபாய் என, மொத்தம் ரூ.22.50 லட்சத்தை ராஜ்பாபுவிடம் கொடுத்தனர்.
அவர்களிடமிருந்து புகைப்படங்களையும் சான்றிதழ் நகல்களையும் ராஜ்பாபு பெற்றுக்கொண்டார்.
ஆண்டுகள் சில கடந்தும் ராஜ்பாபு தங்களுக்கு வேலை வாங்கித் தராததால், தாங்கள் மோசடிக்கு ஆளாக்கப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.
அதனையடுத்து, பணத்தைத் திருப்பித் தரும்படி அந்தப் பத்துப் பேரும் ராஜ்பாபுவிடம் கேட்டனர். ஆயினும், ரூ.11.70 லட்சத்தை மட்டுமே அவர் திருப்பித் தந்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பலமுறை கேட்டும் மீதப்பணம் வராததால், அவர்கள் ராஜ்பாபுமீது ஆவடி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அப்புகாரின்பேரில், ராஜ்பாபு கைதுசெய்யப்பட்டார்.

