சென்னை: போதைப்பொருளை ஒழிக்க மாநில அரசுகளும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) சமத்துவ நடைப்பயணத்தைத் தொடங்கினார்.
அந்த நடைப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “வைகோவின் நெஞ்சுரம், வேகத்தைப் பார்க்கும்போது அவருக்கு 82 வயதா 28 வயதா என எண்ணத் தோன்றுகிறது.
“கலைஞருக்கு அருகே இருந்து அரசியல் கற்றவர் வைகோ. போதை ஒழிப்பு, சாதி மத மோதல் தடுப்பு என்ற கருத்துகளோடு நடைபெறும் இந்த சமத்துவப் பயணம் நிச்சயம் வெற்றி பெறும்.
“இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருளை ஒழிக்க, தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது; முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவு பலன் கிடைத்துள்ளது.
“போதைப்பொருள் என்பது மிகப்பெரிய கட்டமைப்பு. அதனை ஒழிக்க மாநில அரசுகளும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.
“போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதன் பாதிப்பை அறிந்து, அதனைக் கைவிட வேண்டும். அவர்களுடன் இருப்பவர்கள் அவர்களைத் திருத்த வேண்டும். ஏராளமான போதைப்பொருள்கள் நாட்டுக்குள் வருகின்றன. இந்த நுழைவாயில்களை அடைத்தாக வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தியாவின் எல்லை வழியாக போதைப்பொருள் வருவதையும் மாநிலம்விட்டு மாநிலம் கடத்தப்படுவதையும் மத்திய அரசு கண்காணித்துத் தடுக்க வேண்டும். எல்லா மாநில அரசுகளும் தேவையான ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
“போதைப்பொருள் ஒழிப்பு என்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு.
“பெற்றோர்கள், குழந்தைகளின் மீது பாசத்தைக் காண்பிக்க வேண்டும். அதை மறுக்க முடியாது. ஆனால் அதற்காக அவர்கள் பாதை மாறிச் செல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
“பெற்றோர்கள், குழந்தைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். முக்கியமாக அம்மா, அப்பா, அக்கா, தங்கை ஆகியோர் வீட்டில் உள்ள குழந்தைகள் வழிமாறிப் போகாமல் இருப்பதைக் கண்காணிக்க வேண்டும்.
“அதேபோல ஆசிரியர்கள், சமூகப் புகழாளர்கள் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து பரப்ப வேண்டும். சாதி, சமயப் பிரச்சினைகள் தற்போது பரவலாக காணப்படுகின்றன,” என்று ஸ்டாலின் கூறினார்.
திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைப்பயணம் மேற்கொள்ளும் வைகோ, நாள்தோறும் 15 முதல் 17 கிலோ மீட்டா் வரை நடந்து செல்வார். ஜனவரி 12ஆம் தேதி அவர் தமது நடைப்பயணத்தை மதுரையில் நிறைவு செய்கிறார்.

