சென்னை: உண்மையை நிலை நிறுத்துவதற்காக அயராது பாடுபடும் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரஸ் கவுன்சில் 1966 ஜூலை 4ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 16 முதல் செயல்பட்டு வருகிறது. இதை அங்கீகரிக்கும் விதமாக நவம்பர் 16ஆம் தேதி தேசிய பத்திரிகை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சமூக ஊடகத்தில் முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “உண்மையை நிலை நிறுத்த அயராது பாடுபடும் பத்திரிகையாளர்களுக்கு, தேசிய பத்திரிகையாளர் தினத்தில் மரியாதை செலுத்துகிறோம். சகிப்புத்தன்மை இல்லாத காலகட்டத்தில், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் கடைசி பாதுகாவலராக பத்திரிகையாளர்கள் விளங்குகின்றனர்,” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“பத்திரிகைத் துறை செழிக்க வேண்டும். நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்,” என்றும் திரு ஸ்டாலின் கூறியுள்ளார்.

