கமல்ஹாசனின் பெயர், புகைப்படத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்தத் தடை

2 mins read
418d31f0-a6d4-4c8f-bc71-49d7c640c752
கமல்ஹாசனின் பெயர், புகைப்படம், குரல், பட்டப்பெயர் ஆகியவற்றை அவரது அனுமதியின்றி வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். - படம்: பிக்சாபே

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை அவரது அனுமதியின்றி வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், கமல்ஹாசனின் புகைப்படம், பெயர், ‘உலகநாயகன்’ பட்டம், புகழ்பெற்ற வசனங்கள் ஆகியவற்றை அவரது அனுமதியின்றி பயன்படுத்தி டி-சர்ட்டுகள், சட்டைகளை விற்பனை செய்து வந்துள்ளது.

இது தனது தனிப்பட்ட உரிமையைப் பாதிப்பதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கமல் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர்கள் சதீஷ் பராசரன், விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர், “தனிநபர் உரிமையைப் பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மட்டுமல்லாமல், வேறு எந்த நிறுவனமும் கமல்ஹாசனின் அனுமதியின்றி அவரது பெயர், உருவம், வசனங்களைப் பயன்படுத்தக் கூடாது” என வாதிட்டனர்.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “கமல்ஹாசனின் பெயர், புகைப்படம், குரல், பட்டப்பெயர் ஆகியவற்றை அவரது அனுமதியின்றி வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

“அதேசமயம், அரசியல், சமூக விமர்சனங்களுக்காக வரையப்படும் கேலிச் சித்திரங்களில் (கார்ட்டூன்) கமல் படத்தைப் பயன்படுத்தத் தடை ஏதுமில்லை.

“இந்த உத்தரவு குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் கமல் தரப்பில் விளம்பரம் வெளியிட வேண்டும்.

“மேலும், இது தொடர்பாக ‘நீயே விடை’ நிறுவனம் பதிலளிக்க வேண்டும்,” என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்