கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கவேண்டிய நீதிபதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆபாசக் காணொளி எடுத்து துன்புறுத்தப்பட்டனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு காவல்துறை விசாரித்தது. பின்னர் சிபிசிஐடி காவல்துறை விசாரித்த நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு, 25, சபரிராஜன், 25, சதீஷ், 28, வசந்தகுமார், 27, மணிவண்ணன், 28, ஹெரன்பால், 29, பாபு, 27, அருளானந்தம், 34, மற்றும் அருண்குமார் ஆகிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது 2019 மே 21ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனி அறையில் விசாரணை நடைபெற்றது.
மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24ஆம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. அறைக் கதவுகள் மூடப்பட்டு காணொளி வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் காணொளி வழியாக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர்த்தரப்பு இறுதிவாதம் திங்கட்கிழமை முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.
இந்த நிலையில் திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் பொள்ளாச்சி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நந்தினி தேவியும் ஒருவர். அவர் கரூர் மாவட்ட குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.
நீதிபதி நந்தினிதேவி இடமாற்றம் செய்யப்பட்டதால் பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், மறுஉத்தரவு வரும் வரை நீதிபதி நந்தினிதேவி அதே நீதிமன்றத்தில் பணிபுரிவார் என்று சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மகளிர் நீதிமன்றத்துக்கு தகவல் வந்துள்ளதாக நம்பப்படுகிறது. இதனால் நீதிபதி நந்தினிதேவி, பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு அளித்த பிறகே புதிய இடத்துக்கு மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.