சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் சனிக்கிழமை நவம்பர் 28 மாலை ஐந்து மணிக்கு தீபம் ஏற்றப்படும் என்று கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததால் சனிக்கிழமை தூணில் தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் சனிக்கிழமை காலை திருப்பரங்குன்றம் வருகை தந்த நிலையில் தீபச் சட்டியுடன் ரதவீதியில் வலம் வந்தனர்.
இருவரும் தீபம் ஏற்றுவதற்கான உபகரணங்களை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு தங்கும் விடுதிக்கு புறப்பட்டனர்.
மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படும்போது யார், யாருக்கெல்லாம் அனுமதி என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே திருப்பரங்குன்றம் தீபத் தூண் பகுதியில் சனிக்கிழமை யாருக்கும் அனுமதி கிடையாது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என சிஆர்பிஎப் அதிகாரி விக்ரம் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் பக்தர்களிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்த அவர், “இன்று (சனிக்கிழமை) தீபத் தூண் பகுதிக்குச் செல்ல அனுமதிக்க முடியாது. நாளை கண்டிப்பாக வந்து தீபத் தூணைப் பார்வையிடுங்கள்,” என்று கேட்டுக்கொண்டார்.
