ராமேசுவரம்: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறை தமிழகத்திலிருந்து மூவாயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
அங்கு ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் திருவிழாவில் தமிழகம், இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) மாலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும் என்றும் இரண்டு நாள்கள் திருவிழா நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருவிழாவில் கலந்துகொள்ள ராமேசுவரத்திலிருந்து 3,000 பேர் செல்கின்றனர்.
தமிழகத்தின் ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவிலிருந்து 16 கடல் மைல் தொலைவிலும் நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் ராமேசுவரத்திலிருந்து வரிசை எண் அடிப்படையில் மூவாயிரம் பேரும் கச்சத்தீவு செல்வர். இதற்காக நூறு படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருவிழா நடைபெறுவதையொட்டி, வியாழக்கிழமை முதல் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராமேசுவரத்தில் வழக்கமாக இயக்கப்படும் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 300க்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
அப்படகுகள் அனைத்தும் துறைமுகக் கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

