கச்சத்தீவு விவகாரம்: இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

கச்சத்தீவு விவகாரம்: இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

கோப்புப் படம்: தினமணி

14 Oct 2026 - 7:11 pm

1 mins read

கொழும்பு: கச்சத்தீவின் மீதான இறையாண்மை இலங்கை அரசிடமே உள்ளது என்கிற நிலைப்பாட்டை இந்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், கச்சத்தீவை இலங்கைக்கு மாற்றியளித்த ஒப்பந்தங்களை மீண்டும் ஆய்வு செய்யவோ அல்லது ரத்து செய்யவோ இந்திய அரசு விரும்பவில்லை என்றார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது, அந்நாடு இத்தகவலைத் தெரிவித்துள்ளதை அதிபர் சுட்டிக்காட்டினார்.

இதன்மூலம் கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என்பதை இந்திய அரசு சட்டரீதியாக உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், இந்நடவடிக்கைக்குத் தனது வரவேற்பைத் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் கடல் அல்லது நிலப்பரப்புகளைப் பிற சக்திகள் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அதிபர் அநுரகுமார உறுதியளித்தார்.

இந்திய மீனவர்கள் கடல் எல்லையைக் கடப்பது, அதன் காரணமாக கைதாவது போன்ற பிரச்சினைகள் தூதரக ரீதியான வழிமுறைகள் மூலம் அமைதியான முறையில் கையாளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு நீடிப்பதாகவும் அதிபர் அநுரகுமார திசநாயக்க மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்