கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: நீதிபதிகளின் கேள்விகளால் திணறிய அரசு தரப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: நீதிபதிகளின் கேள்விகளால் திணறிய அரசு தரப்பு

படம்: தமிழக ஊடகம்

05 Sep 2024 - 7:36 pm

2 mins read

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக ‘சிபிஐ’ விசாரணை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், எதன் அடிப்படையில் மாவட்ட ‘எஸ்பி’யின் இடைநீக்கம் திரும்பப் பெறப்பட்டது என தமிழக அரசை உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி எதிர்க் கட்சிகளான அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக ஆகியவை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மாநில அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் வாதிட்டனர்.

“குற்றம்செய்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழப்பு சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை,” என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“ஒவ்வொரு ஆண்டும் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து கொண்டே இருக்கின்றன. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்,” என எதிர்த்தரப்பு வாதிட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘கள்ளச்சாராய மரணம் தொடர்பாக காவல்துறைக்கு எப்போது தகவல் கிடைத்தது, முதல் உயரிழப்பு எப்போது நடந்தது, யார், யார் எந்தெந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், பலர் இறந்துவிட்டனர் என மருத்துவர்கள் தகவல்தெரிவித்த பிறகுதான் காவல்துறைக்கு தகவல் தெரியுமா, உயிரிழப்பு சம்பவத்துக்கு கள்ளச்சாராயம் காரணமல்ல என எதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார், பின்னர் எதற்காக மாவட்ட ‘எஸ்பி’யை பணியிடை நீக்கம் செய்தீர்கள், பின்னர் எதன் அடிப்படையில் ‘எஸ்பி’ இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது, மற்ற காவல்துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டு விட்டதா, ஒருமாதத்தில் என்ன மாறுதல் நடந்து விட்டது என்பதற்காக எஸ்பி மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது, இல்லையென்றால் எந்த ஆதாரமும் இல்லாமல் எஸ்பி-யை இடைநீக்கம் செய்தீர்களா” என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்விகளில் சிலவற்றுக்கு மட்டுமே அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் எத்தனை வழக்குகளில் எத்தனை பேருக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது என்ற விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

குறிப்புச் சொற்கள்