சென்னை: 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பன பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அக் கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து வருகிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், கட்சி நிர்வாகிகளை செப்.18 முதல் 21ஆம் தேதி வரை மண்டல வாரியாகச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அந்தச் சந்திப்புக் கூட்டங்கள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டிஎன் ராஜரத்தினம் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்நாள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
சென்னை மண்டல கலந்தாலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், தாய்மொழியை மட்டும் மறந்துவிடாதீர்கள். உங்களால் தீர்க்க முடிந்ததை மட்டும் வாக்குறுதியாகக் கொடுங்கள். என்னைச் சமூகரீதியாக அடையாளப்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். அதை நான்தான் சொல்ல வேண்டும் என்றார்.


