சென்னை: தேர்தல் உடன்பாட்டின்படி, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் திமுக ஆதரவில் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்.
தமிழ்நாட்டைப் பிரதிநிதித்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
புதிதாக ஆறு பேரைத் தேர்ந்து எடுப்பதற்கான தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. போட்டி இருந்தால் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உளளது. வேட்பு மனுத் தாக்கல் ஜூன் 2ஆம் தேதி தொடங்குகிறது.
அன்புமணி, என்.சந்திரசேகரன் ஆகியோர் கடந்த முறை அதிமுக ஆதரவில் மாநிலங்களவைக்குத் தேர்வானவர்கள்.
இதர நால்வரும் திமுக சார்பில் தேர்வாகினர். ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்து எடுக்க 34 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். அந்த அடிப்படையில், திமுகவுக்கு 4 உறுப்பினர்களும் அதிமுகவுக்கு 2 உறுப்பினர்களும் தேர்வுபெறும் நிலை உள்ளது.
திமுக சார்பில் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் திமுக வாய்ப்பு வழங்குமா என்பது உறுதியாகவில்லை.
மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மீண்டும் தேர்வாக வாய்ப்பு உள்ளது. சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் முகமது அப்துல்லாவும் மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், எம்.சண்முகத்துக்குப் பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்தது.
அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடாத நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது என உடன்பாடு கையெழுத்தானது.
அதனைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலின்போது திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். எனவே, உடன்பாட்டின் அடிப்படையில் கமலுக்கு திமுக ஆதரவில் மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்படும் என்று திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அன்புமணி நிலை
தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் பாமக இல்லை. இதுதவிர பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையில் மோதல் நிலவி வருவதால் அன்புமணியின் எம்.பி. பதவிக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இரண்டு இடங்களையும் அதிமுகவே நிரப்ப உள்ளது.