கன்னியாகுமரி: ஏழு மாதங்களில் 99 சிறுமிகள் கருத்தரிப்பு

1 mins read
323daece-3be4-4215-9a0b-0622ac323021
குழந்தைத் திருமணம், காதல், பாலியல் துன்புறுத்தல் ஆகியவையே சிறுமிகள் கருத்தரிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. - மாதிரிப்படம்: ஊடகம்

நாகர்கோவில்: தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து, ஏழு மாதங்களில் மட்டும் அத்தகைய 99 சிறுமிகள் கருத்தரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குழந்தைத் திருமணம், காதல், பாலியல் துன்புறுத்தல் ஆகியவையே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

கருத்தரித்த சிறுமிகள் அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மூலம் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் நேரடி மேற்பார்வையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், அண்மையில் சுங்கான்கடையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

அதில் பேசியவர்கள் கூறுகையில், “பெரும்பாலானோர் பள்ளி இறுதியாண்டில் கர்ப்பமாகி உள்ளனர். எதிர்பாலின ஈர்ப்பு காரணமாகக் காதலில் விழுந்து, அவர்கள் கட்டுப்பாட்டை மீறிவிடுகின்றனர். பல மாணவிகள் தாங்கள் கருத்தரித்துள்ளது குறித்து ஆறு, ஏழு மாதம்வரை அறிந்திருக்கவில்லை,” என்றனர்.

உடல், மனரீதியாக ஒரு பெண் 21 வயதில்தான் திருமணத்திற்குத் தயாராகிறார் என்றும் தாய்மை அடையவும் அதுதான் சரியான வயது என்றும் மாவட்டச் சமூகநல அலுவலர் விஜயமீனா குறிப்பிட்டார்.

அதனைமீறி சிறுவயதில் திருமணம் செய்தால் சத்துக் குறைபாடு, குறைந்த எடையுடன் குழந்தை பிறத்தல், அதிக ரத்தப்போக்கு போன்றவை நிகழலாம் என்றும் சில நேரங்களில் தாய் சேய் உயிரிழக்கும் ஆபத்தும்கூட உண்டு என்றும் அவர் எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்