திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த திருவண்ணாமலையில் 20 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
அத்துடன், காவலர்களுக்கு அடிப்படை வசதிகளை கண்காணிக்க மூன்று பாதுகாப்பு வசதி குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
கார்த்திகைத் தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற கூட்டத்தில், திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது, அனைத்து பணிகளுக்கும் கண்காணிப்பு குழு அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆணையர் தர்ப்பகராஜ் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
தற்காலிகப் பேருந்து நிலையம், கார் நிறுத்தும் இடம், பொதுப் போக்குவரத்து, சாலை வசதி மேம்பாடு ஆகியவற்றை கண்காணிக்க நான்கு போக்குவரத்து வசதி குழுக்கள் அமைக்கப்படுகின்றன. கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் மருத்துவ வசதிகளை ஒருங்கிணைக்க இரு மருத்துவ வசதி குழுக்கள், குடிநீர், கழிவறை, தூய்மை, தடையற்ற மின் வசதி ஆகியவற்றை கண்காணிக்க நான்கு அடிப்படை வசதிக் குழுக்கள், கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பு வசதி, காவலர்களின் அடிப்படை வசதிகளை கண்காணிக்க மூன்று பாதுகாப்பு வசதிக் குழுக்கள், தொலைத்தொடர்பு, கைப்பேசி செயலி வடிவமைப்பு, ஊடக ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேற்கொள்ள மூன்று பொதுமக்கள் தொடர்புக் குழுக்கள், தேர்த் திருவிழா, உணவுப் பாதுகாப்பு, அன்னதான அனுமதி, மாட்டுச் சந்தை ஏற்பாடு என இதர பணிகளைக் கண்காணிக்க நான்கு பணி குழுக்களும் அமைக்கப்பட்டன.
இக்குழுக்களின் செயல்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஒருங்கிணைத்து கண்காணிப்பார் என்று ஆணையர் தெரிவித்தார்.

