புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கரூரில் கடந்த 2025ஆம் ஆண்டு நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணையைச் சென்னையில் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
அரசாணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பணி நியமன அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது.
மாநில அரசு சார்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, “வேலைவாய்ப்பு தொடர்பான விவகாரத்தில் பொதுநல வழக்குத் தொடர முடியாது,” என்று வாதிட்டார்.
“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கக்கூடாதா?” என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், எதிர் மனுதாரர்களான சீனி, அகமது ஆகியோர் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு குறித்தும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் குறித்தும் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


