தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரூர் அசம்பாவிதம்: விஜய் ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

2 mins read
000e0e4c-946b-4b43-bb96-881c7a34d870
இதயமும் மனதும் கனத்துப் போயிருக்கிறது என்று விஜய் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: தமிழக ஊடகம் (பிடிஐ)

கரூர்: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து தவெக தலைவர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

“என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று (சனிக்கிழமை) நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

“என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனத்துக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.

“நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்,” என்று விஜய் பதிவில் தெரிவித்துள்ளார்.

இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்