கரூர் துயரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு என்கிறது உச்ச நீதிமன்றம்

2 mins read
a4a5e7bc-bece-4710-83c8-1e7db83a3772
கரூர் மரண விவகாரத்தில் விளக்கம் வந்த பின்னர் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. - படம்: பிபிசி

புதுடெல்லி: கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு எதிராக தவெக தொடர்ந்த மனு மீது வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) விசாரணை நடைபெற்றது.

விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடக்கும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் எப்படி வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. எனவே, கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடைமுறையில் தவறுகள் இருப்பதாகத் தெரிகிறது,” என்று கூறினர்.

மேலும், இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் விவாதிக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

உச்ச நீதிமன்ற விசாரணையின்போது, தனி நீதிபதி ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை அமைப்புகளின் புலன் விசாரணையில் தனிநபர் ஆணையம் தலையிடாது என்றும் ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவில் அரசின் தலையீடு இருப்பதாகக் கூறுவது தவறானது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

மேலும், “இந்த தனி நீதிபதி ஆணையம் நெரிசல் தொடர்பான விசாரணைக்கு அமைக்கப்பட்டதல்ல. எதிர்காலத்தில் தமிழகத்தின் பொது இடங்களில் கூட்டங்கள் நடத்த விதிமுறை வகுக்கவும் நிவாரணத்தை பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்கு பிறப்பித்த தடையை நீக்க வேண்டும்,” என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்