தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: பட்டியலில் 90,000 முதல்முறை வாக்காளர்கள்

2 mins read
dd673dcf-efb7-4960-868f-a3a21bcfd834
நடைபெறவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் 93,284 புதிய வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றவிருக்கின்றனர். - படம்: இந்திய ஊடகம்

ஸ்ரீநகர்: நடைபெறவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் 93,284 புதிய வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றவிருப்பதாக ஜம்மு காஷ்மீர் தலைமைத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி, செப்டம்பர் 25ஆம் தேதி, அக்டோபர் 1ஆம் தேதி என மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் தலைமைத் தேர்தல் அலுவலர், “ஜம்மு காஷ்மீர் தேர்தலில் 93,284 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கு இணையாக இளம், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 18 வயதிலிருந்து 29 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 34 ஆயிரமாகப் பதிவாகி உள்ளது. வாக்காளர் மக்கள்தொகை விகிதம் 0.59 விழுக்காட்டிலிருந்து 0.60 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

“ஜம்மு காஷ்மீரின் 20 மாவட்டங்களிலும் புகைப்பட வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு சுருக்கதிருத்தம் கடந்த ஜூலை 1ஆம் தேதி அன்று நிறைவடைந்தது. திருத்தப்பட்ட பட்டியலை தயாரிக்கும்போது, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்கும் நடவடிக்கை மற்றும் துல்லியம் ஆகியவற்றை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டது.

“அதன்படி ஜம்மு காஷ்மீரில் மொத்தத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 88.03 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 43 லட்சத்து13 ஆயிரம் பெண்கள், 168 மூன்றாம் பாலினத்தவர், 44 லட்சத்து 89 ஆயிரம் ஆண்கள் உள்ளிட்டோர் அடங்குவர்,” என்று அவர் கூறினார்.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் தேர்தல் பணிகளுக்காக 298 பிரிவுகள் துணை ராணுவப்படைகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநகர், ஹந்த்வாரா, கந்தர்பால், புத்காம், குப்வாரா, பாரமுல்லா, பந்திபோரா, அனந்த்நாக், சோபியான், புல்வாமா, அவந்திபோரா, குல்காம் ஆகிய இடங்களுக்கு துணை ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் காவல்துறையினர், எல்லை பாதுகாப்புப் படை, சஹஸ்த்ரா சீமா பால், இந்தோ - திபெத்திய எல்லை காவல் படை உள்ளிட்ட படைகளிடம் அமைதியான முறையில் தேர்தல் நடை பெறுவதை உறுதி செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதில், ஸ்ரீநகர் அதிகபட்ச ராணுவப்படையினரைப் பெற்றுள்ளது (55). அதையடுத்து அனந்த்நாக் (50), குல்காம் (31), புத்காம், புல்வாமா மற்றும் அவந்திபோரா காவல் மாவட்டங்கள் (தலா 24), சோபியான் (22), குப்வாரா (20) , பாரமுல்லா (17), ஹந்த்வாரா 15, பந்திபோரா 13, மற்றும் கந்தர்பால் (3) என்கிற எண்ணிக்கையில் துணை ராணுவப்படையினர் பிரிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்