தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரளாவில் 3 ஏடிஎம்களில் கொள்ளையடித்த கும்பல் தமிழ்நாட்டில் சிக்கியது

2 mins read
என்கவுன்டரில் ஒரு கொள்ளையன் மரணம்
542f4595-6dd3-42cc-9f6e-72370eb74487
கைதான கொள்ளையர்களுள் ஒருவனை காவலர்கள் அழைத்துச் செல்கின்றனர். - படம்: ஊடகம்

நாமக்கல்: கேரளாவில் அடுத்தடுத்து 3 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடித்த வடமாநிலக் கும்பலை நாமக்கல்லில் வைத்து தமிழகக் காவலர்கள் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) காலை ஒரு கண்டெய்னர் லாரி வேகமாக சென்றது.

அப்போது பள்ளிக்கு வந்த குழந்தைகள் மீதும் அங்கிருந்த இரண்டு கார்கள், 4 இரு சக்கர வாகனங்கள் மீதும் லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக குமாரபாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற காவலர்கள் கண்டெய்னர் லாரியை நிறுத்த முயற்சி செய்தனர்.

ஆனால், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் காவலர்களின் வாகனத்தின் மீது மோதும் வகையில் சென்றதால் காவலர்கள் அருகில் கிடந்த கற்களை எடுத்து லாரியைத் தாக்கினர்.

இதனால் நிலைகுலைந்து வாகன ஓட்டி லாரியை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிரடிப் படையினர் வாகனத்தைச் சுற்றி வளைத்தனர்.

இந்நிலையில், ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் சாலையின் போக்குவரத்தை தடை செய்து, அந்த கண்டெய்னர் லாரியைச் சோதிப்பதற்காக யாருமற்ற வனப்பகுதிக்குள் கொண்டு சென்றனர். வாகனத்தை திறந்து பார்த்தபோதுதான் அதனுள் இன்னோவா சொகுசு கார் ஒன்றும் பணமும் கட்டு கட்டாக இருந்ததுடன் 7 குற்றவாளிகள் இருந்ததும் தெரியவந்தது.

லாரியின் பின்புறக் கதவை திறந்து, அங்கிருந்து அடர்ந்த முள்ளுக் காட்டுக்குள் தப்பியோடிய 7 பேரில் ஒருவரை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

முன்னதாக கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.65 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. காரில் வந்த கொள்ளையர்கள் 3 இயந்திரங்களையும் கேஸ் கட்டிங் மூலம் வெட்டி எடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாலை 3-4 மணி இடைவெளியில் இந்தக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாகக் காவலர்களின் முதல்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ள நிலையில், ரூ.65 லட்சம் கொள்ளையடித்த கும்பல் குமாரபாளையத்தில் பிடிபட்டது.

குறிப்புச் சொற்கள்
காவலர்கள்கொள்ளைகும்பல்