தமிழகத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு

1 mins read
c63c7d87-bb9e-470a-81b7-5d870246d67c
நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே பழவூர் பகுதியில் தனியார் நிறுவனத் தோட்டப்பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள். - படம்: இந்திய ஊடகம்

நெல்லை: நெல்லை அருகே மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள மாநிலத்தின் சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

கேரளாவில் இருந்து இறைச்சி, மருத்துவம், பிளாஸ்டிக் கழிவுகள் நெல்லை உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே பழவூர் பகுதியில் தனியார் நிறுவனத் தோட்டப்பகுதி, அரசு புறம்போக்கு நிலம், வருவாய்த்துறை ஊழியரின் நிலத்தில் திருவனந்தபுரத்திலுள்ள மண்டலப் புற்றுநோய் மருத்துவமனை முகவரியுடன் கூடிய மருத்துவக் கழிவுகள், ஊசிகள், உணவுக்கழிவுகள், பிளாஸ்டிக் பொருள்கள், வீட்டுக்கழிவுப் பொருள்கள் உள்ளிட்டவை மூட்டை, மூட்டையாக் கொட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நெல்லை மாவட்ட வருவாய் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். புகாரின்படி சுத்தமல்லி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

கழிவுகளைக் கொட்டியது தொடர்பாக சுத்தமல்லியைச் சேர்ந்த இருவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கோடகநல்லூரில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என திருவனந்தபுரம் மண்டலப் புற்றுநோய் மருத்துவமனை மறுத்துள்ளது.

இந்நிலையில் நெல்லை அருகே மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரளச் சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

10 பேர் அடங்கிய குழுவினர் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்