பாஜகவிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள்; அண்ணாமலைக்கு ஆதரவு

பாஜகவிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள்; அண்ணாமலைக்கு ஆதரவு

2 mins read
2423674c-eb74-4da2-bd34-e1cf93fdc88e
அண்ணாமலையின் அறிவிப்புக்குப் பிறகு அவரது புதிய அரசியல் இயக்கத்தில் 1.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இணைந்துள்ளனர். - படம்: த இந்து

கோவை: பாஜகவிலிருந்து அண்ணாமலை வெளியேறிய நிலையில், கோவையில் அவருடைய ஆதரவாளர்களான மாவட்டத் தலைவர்கள் உட்பட பலர் விலகியுள்ளனர். இது பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அண்ணாமலைக்கு தொடர்ந்து சுவரொட்டி அடித்து, தனிக்கட்சி தொடங்குவதை எதிர்பார்த்திருந்த அவரது தீவிர ஆதரவாளரான பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “அண்ணாமலை தொடங்கிய ‘வீ த லீடர்’ அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளோம்.

“இது பாஜகவின் மற்றொரு அணி கிடையாது. எதிர்வரும் தேர்தலில் போட்டி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அது இடைத்தேர்தலாகவும் இருக்கும், உள்ளாட்சித் தேர்தலாகவும் இருக்கும். விஜய், அண்ணாமலை ஆகிய இருவரும்தான் இனி தமிழக அரசியலில் இருப்பார்கள்,” என்று பாலாஜி கூறினார்.

கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சந்திரசேகரும் கட்சியிலிருந்து வெளியேறினார்.

அதேபோல் தெற்கு மாவட்டத்தில் உள்ள 22 மண்டலத் தலைவர்களில் 14 பேர் விலகிய நிலையில் அவர்களுடன், பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் விலகினர்.

முன்னாள் மாவட்டத் தலைவரும், எம்.பி தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டவருமான கே.வசந்தராஜனும் பாஜகவிலிருந்து விலகியுள்ளார்.

“தமிழக நலன் கொண்ட தேசியச் சிந்தனை கொண்ட, ஊழலற்ற, நேர்மையான அரசியல் பாதையில் அண்ணாமலையுடன் இணைந்து பயணிக்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் அறிவிப்புக்குப் பிறகு அவரது புதிய அரசியல் இயக்கத்தில் 1.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இணைந்துள்ளனர்.

அண்ணாமலைக்கு இளையர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் இனிவரும் நாள்களில் அவரின் புதிய இயக்கத்தில் மேலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்