கோவை: குண்டு வெடிப்பு வழக்கில் தலைமறைவான முக்கியக் குற்றவாளி 28 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையிடம் சிக்கினார்.
1998ஆம் ஆண்டு கோவையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அதில் 58 பேர் கொல்லப்பட்டனர். 231 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை காவல்துறை முதற்கட்ட விசாரணை மேற்கொண்டது. பின்னர், சிறப்பு புலனாய்வு பிரிவிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
குண்டுவெடிப்பு தொடர்பாக மொத்தம் 166 பேர் கைதாகினர். அவர்களில் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க நிறுவனர் பாஷாவும் ஒருவர்.
இவ்வழக்கில் பலருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் இன்னும் சிறையில் உள்ளனர்.
இந்தக் குண்டுவெடிப்புடன் தொடர்புள்ள டெய்லர் ராஜா உள்ளிட்ட இருவர் மட்டும் காவல்துறையின் கண்களில் சிக்காமல் தலைமறைவாயினர். அவர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 10ஆம் தேதியன்று டெய்லர் ராஜா, சட்டீஸ்கர் மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரிக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1998ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்துகொண்டார். அப்போது அவர் உரையாற்றவிருந்த மேடைக்கு அருகே குண்டு வெடித்தது.
அதையடுத்து, கோவை மாநகரில் 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

