குஷ்பு கணவர் சுந்தர் சி இரட்டை இலைச் சின்னத்தில் போட்டி

குஷ்பு கணவர் சுந்தர் சி இரட்டை இலைச் சின்னத்தில் போட்டி

2 mins read
729c4423-9447-4b76-99f7-8204e7e465dd
நடிகர், இயக்குநர் சுந்தர் சி. - படம்: தினமணி

சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக நடிகை குஷ்புவின் கணவரும் நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சியின் வேட்பாளராக மதுரை மத்திய தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

புதிய நீதிக் கட்சிக்கு மதுரை மத்திய தொகுதியுடன் வேறொரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அது எந்தத் தொகுதி என்பது பற்றியும் அத்தொகுதியின் வேட்பாளர் பற்றியும் திங்கட்கிழமை (மார்ச் 30) அறிவிக்கப்படும் என்றும் சண்முகம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் சுந்தர். சி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

“அவர் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவார். இரண்டாவது வேட்பாளரை சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம். அவர் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவார்,” என்று கூறப்பட்டுள்ளது.

குஷ்புவைத் தொடர்ந்து சுந்தர்.சி யும் அரசியலில் களமிறங்குகிறார். முதல்முறையாக அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

நடிகர், இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர் சுந்தர் சி. 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

குஷ்பு, திமுக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்த பின்னர் 2020ல் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது பாஜக மாநில துணைத் தலைவராக உள்ளார். கடந்த 2016 முதல் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்