சென்னை: வாடகை நிலுவைத்தொகையைச் செலுத்தாததால் புகழ்பெற்ற கிண்டி குதிரைப் பந்தயத் திடல் மூடி, முத்திரை வைக்கப்பட்டது.
சென்னை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கிண்டி குதிரைப் பந்தயத் திடல் கடந்த 1945ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.
ஏறக்குறைய 160 ஏக்கர் பரப்பளவுள்ள அந்நிலம், மெட்ராஸ் குதிரைப் பந்தய மன்றத்திற்கு 99 ஆண்டுக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.
அதற்கு, ஆண்டிற்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து வாடகையை உயர்த்துவது தொடர்பில் விளக்கமளிக்குமாறு அறிவிப்புக் கடிதம் தரப்பட்டது. ஆனால், குதிரைப் பந்தய மன்றம் அதனை ஏற்கவில்லை.
ஆயினும், அதனை ஏற்க மறுத்த தமிழக அரசு, 1970 - 2004 காலகட்டத்திற்கான வாடகை நிலுவைத்தொகையாக ரூ.730.86 கோடியைச் செலுத்தும்படி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து, குதிரைப் பந்தய மன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “குதிரைப் பந்தயம் நடத்துவதில் எந்தப் பொதுநலனும் இல்லை. அரசு வழங்கிய நிலத்தைக் குதிரைப் பந்தய மன்றம் உள்வாடகைக்குவிட்டு பெரும்பணம் ஈட்டி வருகிறது. தமிழக அரசு அந்நிலத்தை மீட்டு, மக்களுக்கு நன்மை தரும் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்,” என உத்தரவிட்டது.
அத்துடன், ஒரு மாதத்திற்குள் வாடகை நிலுவைத்தொகையைச் செலுத்தவும் குதிரைப் பந்தய மன்றத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், வாடகை நிலுவைத்தொகையைச் செலுத்தாததால் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 9) கிண்டி குதிரைப் பந்தயத் திடலை அதிகாரிகள் மூடி, முத்திரை வைத்தனர்.


