தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிட்னி விற்பனை மோசடி: உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

2 mins read
4ebade7d-23d6-429d-87de-128941eef78c
சிறுநீரக மோசடி தொடர்பாக மருத்துவமனைகள் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். - சித்திரிப்புப்படம்: ஊடகம்

சென்னை: சிறுநீரக விற்பனை மோசடியில் மருத்துவமனைக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்ற வாதம் ஏற்புடையதல்ல என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிய வேண்டும் என்றும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் தொடர்பில் பெரும் மோசடி நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தானம் தருபவர்களுக்கு குறைவான தொகையைக் கொடுத்து, உறுப்புகளை வெளிச்சந்தையில் பலமடங்கு அதிக விலைக்கு விற்பதும் இதில் பல முகவர்கள் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சிறுநீரக விற்பனை முறைகேடு தொடர்பாக சிபிஐ உத்தரவிடக் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முகாந்திரம் இருப்பதாக வழக்குப் பதிவாகும் பட்சத்தில் விசாரணையைத் தொடங்குவது அவசியம் எனக் குறிப்பிட்டது.

இந்நிலையில், திருச்செங்கோடு பகுதியில் நடந்த சிறுநீரக மோசடி தொடர்பான முதற்கட்ட விசாரணையில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதும் இந்த முறைகேட்டில் இரு முகவர்களுக்கு தொடர்பு இருப்பதும் அம்பலமானது.

“முதற்கட்ட விசாரணை அடிப்படையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய திருச்சி, பெரம்பலூரில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு வழங்கிய உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

“மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கும் மாவட்ட அங்கீகாரக் குழுக்களை மறுசீரமைப்பது மற்றும் மாநில அங்கீகாரக் குழுவை புதிதாக உருவாக்கும் நடவடிக்கையை அரசு துவக்கியுள்ளது,” என்று சத்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனைகள் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

“மருத்துவமனையை நம்பித்தான் மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். அங்குள்ள மருத்துவர்கள்தான் சிகிச்சை அளிக்கின்றனர்,” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்