நூல் வாசிப்பு மூலம் அறிவுத் தீ பரவ வேண்டும்: மு.க.ஸ்டாலின்

2 mins read
9ced4ee2-41e8-406e-8393-95cb082419ba
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் பொது நூலகத் துறையின் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலில் 84 நூல்களை வெளியிட்டார். - படம்: தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை/ எக்ஸ் தளம்

சென்னை: நூல் வாசிப்பு மூலம் தமிழக இல்லங்களில் அறிவுத் தீ பரவ வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். “அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். நூல் வாசிப்பு மூலம் தமிழக இல்லங்களில் அறிவுத் தீ பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழாவில் மொழிபெயர்ப்புகள், பதிப்பக பரிமாற்றம் ஆகியவற்றில் முக்கியத்துவம் செலுத்தப்பட்டது,” என்றார் அவர். நான்காவது ஆண்டாக பன்னாட்டுப் புத்தகத் திருவிழா சென்னையில் நடத்தப்பட்டது. 120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் பங்கேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. “மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் அல்ல, அது உலக மக்களை இணைக்கக் கூடிய பாலம். நூல்கள் வெறும் பேப்பர் அல்ல. அவை ஒரு தலைமுறை, மற்றொரு தலைமுறைக்கு விட்டுச் செல்லக்கூடிய அறிவுச்சொத்து. “தொழில் முதலீடு செய்ய மட்டுமல்ல, அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு. உலகின் உயரிய சிந்தனைகள் தமிழக மக்களை வந்தடைய வேண்டும். “தமிழ்நாட்டு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் மூலமாக சிறந்த தமிழ் படைப்புகளை ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,” என்று திரு ஸ்டாலின் கூறினார். நிகழ்ச்சியில் மொழி பெயர்க்கப்பட்ட 84 நூல்களைகளை திரு ஸ்டாலின் வெளியிட்டார். 45 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் திருக்குறளையும் அவர் வெளியிட்டார்.

குறிப்புச் சொற்கள்