சென்னை: இண்டிகோ விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கோல்கத்தாவிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்தது. சென்னையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி, இரவு 11.30 மணிக்கு தரையிறங்கத் திட்டமிட்டிருந்தது.
விமானம் தரையிறங்குச் சற்று முன்பு, விமானத்தின் இடதுபுற இயந்திரத்தில் கோளாறு இருந்தது தெரியவந்தது.
அதுகுறித்து சென்னை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னை விமான நிலையத்தில் முழு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது.
விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க ஏதுவாக விமான நிலைய அதிகாரிகள் அவசரகால மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர் என்று இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த இண்டிகோ 6E-623 விமானத்தில் விமான ஓட்டி, சிப்பந்திகள் உட்பட 224 பேர் பயணம் செய்தனர்.
நல்ல வேளையாக எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பயணிகள் 224 பேருடன் அந்த விமானம் 11.37 மணிக்கு பாதுகாப்பாகத் தரையிறங்கியது. அதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இரவு 11.47 மணிக்கு முழு அவசரகால நிலை விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு விமான நிலையத்தில் வழக்கமான பணிகள் எந்தவிதப் பாதிப்புமின்றி இயல்பாகத் தொடர்ந்ததாக விமான நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


