“ஒவ்வொரு தனி மனிதனின் துன்பத்திற்கும் அவனது சுயநல ஆசையே காரணம்,” என்றார் புத்தர்.
“முதலாளிகள் லாப பேராசையே தொழிலாளிகளின் துன்பத்திற்குக் காரணம்,” என்றது கம்யூனிசம்.
அதனால்தான் தொழிலாளர்கள் புரட்சி செய்து, ‘எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டு மணிநேர உறக்கம்’ என்கிற உரிமையைப் பெற்றார்கள். அவ்வுரிமைக்காகப் பெற்ற நாள்தான் ‘மே தினம்’ எனும் உலகத் தொழிலாளர் தினமாக மாறியது.
அமெரிக்காவில் இயந்திர வளர்ச்சி உண்டான காலகட்டத்தில்தான் தொழிலாளர்களிடம் விழிப்பு ஏற்பட்டது.
‘இருள் விலகத் துவங்கும் நேரத்தில் வேலையைத் தொடங்கி, இருள் சூழத் தொடங்கும் நேரம் வரை’ கடுமையாக உழைத்த தொழிலாளர்களுக்குப் போதிய ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. அமெரிக்கத் தொழிலாளர்களின் எழுச்சியே மே தினம் உருவாக காரணமானது.
1886ஆம் ஆண்டு மே முதல் நாள், ‘மே தினம் - தொழிலாளர்களின் வேலை நேரம் எட்டு மணி நேரம்’ என்கிற உரிமை தினமாக கொண்டாடப்பட்டது.
அதன் பின்னர், 1889ல் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த அனைத்துலக தொழிலாளர் மாநாட்டில் 1889 மே 1 உலகத் தொழிலாளர் தினமாகக் கொண்டாட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் உழைப்பாளர் தினம் 1923ஆம் ஆண்டு மே 1ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது. இதில் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய சேதி என்னவென்றால், இந்திய உழைப்பாளர் தினம் தமிழகத்தில்தான் முதலில் கொண்டாடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
‘விவசாயத் தொழிலாளர் கட்சி தொடங்கப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் முதல் மே தினம் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
இதில் இன்னொரு பெருமைக்குரிய அம்சம், வெள்ளையர் அரசின் எதிர்ப்பை மீறி மே தின விழாவை நிகழ்த்திக் காட்டியவர், சென்னையில் மீனவர் குலத்தில் பிறந்த தோழர் ம.சிங்காரவேலர். சென்னை மயிலாப்பூர் பகுதியில், செல்வச் செழிப்பான குடும்பத்தில் 18-02-1860ல் பிறந்தார்.
பர்மாவில் இருந்து தேக்கு மரமும் அரிசியும் வாங்கி, கடல் வழியே கொண்டு வந்து தமிழகத்தில் வியாபாரம் செய்துவந்ததால் செல்வத்திற்குப் பஞ்சமில்லை. சென்னை (மெட்ராஸ்) சட்டக்கல்லூரியில் படித்து 1907ல் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக தன் பெயரைப் பதிவு செய்துகொண்டார். ரஷ்யாவில் ஜார் மன்னரை எதிர்த்து நடந்துகொண்டிருந்த கிளர்ச்சியும் இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திர வேட்கை போராட்டமும் சிங்காரவேலரை தேச சேவையின்பால் ஈர்த்தது.
வெளிநாடுகளில் வெளியாகும் பொதுவுடமை சித்தாந்த, மூட நம்பிக்கைக்கு எதிரான நூல்களை வரவழைத்துப் படித்து, அதை எளிமையான தமிழில் சொற்பொழிவுகளாக நிகழ்த்தினார் சிங்காரவேலர். பொதுவுடமைச் சித்தாந்தவாதிகளைக் கண்டாலே, அஞ்சி நடுங்கி அவர்களை ஒடுக்கி வந்தது ஆங்கிலேய அரசு. அதனால் சிங்காரவேலரை தீவிரமாகக் கண்காணித்ததோடு, அவர் வெளிநாடுகளிலிருந்து புத்தகங்களை வாங்குவதற்கு மறைமுகத் தடைபோட்டது.
சிங்காரவேலர் அஞ்சவில்லை. புதுச்சேரி பிரெஞ்ச் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. அதனால் புதுச்சேரியில் இருந்த தன் மீனவ உறவினர்களிடம் சொல்லி, வெளிநாட்டிலிருந்து புத்தகங்களை வாங்கச் செய்தார். அதை சென்னை கொண்டுவர ஒரு உத்தியும் கண்டறியப்பட்டது. அதன்படி கருவாட்டு பார்சலுக்குள் அந்தப் புத்தகங்களை வைத்து அனுப்ப ஏற்பாடு செய்தார். வெள்ளையர்களால் இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
1921ல் `பி அண்ட் சி மில்’ தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து பிரம்மாண்ட ஊர்வலத்தை அரசின் அச்சுறுத்தலையும் மீறி நடத்திக்காட்டினார் சிங்காரவேலர். கயாவில் 1922ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், `டியர் காம்ரேட்’ எனப் பேச்சை ஆரம்பித்து ஆர்ப்பரிக்க வைத்தார்.
உலகம் முழுமைக்கும் தமிழர் சிங்காரவேலரைப் போல் பிரதிபலன் பாராது தொழிலாளர்கள் நலனிற்காக உழைத்த தலைவர்கள் பலருண்டு. அவர்களின் தியாகத்திற்கும் போராட்டத்திற்கும் உரிய உயரிய மரியாதை இன்றைய உலகில் கிடைக்கிறதா என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கிறது.
உலக அளவில் பொதுவுடமை - கம்யூனிச சித்தாந்தங்களைக் கைவிடாத நாடுகள் பல உண்டு என்றாலும், அதில் சில நாடுகள் தங்களின் அடக்குமுறையால்தான் இந்த சித்தாந்தத்தை மக்கள் கடைப்பிடிக்கும்படி செய்கிறது.
தன்னெழுச்சியாக பொதுவுடமை சித்தாந்தத்தின் மீது ஈர்ப்பு குறைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இதற்குக் காரணம், வர்த்தக நிறுவனங்கள் செய்யும், நுகர்வோருக்கு தேவையில்லாததைக்கூட திணிக்கும் செயலும், அதில் உழலும் மக்கள் மாதத்தவணை கட்டுவதற்காக ஓடுவதில் நேரம் போய்க்கொண்டிருக்கிறது.
16 மணி நேரம்கூட உழைக்கத் தயாராக இருக்கிறது இன்றைய தலைமுறை. அவர்களின் நவீன வாழ்க்கைக்கு பணமே முக்கியமானதாக இருப்பதால் இந்த நிலை.
மக்களில் பெரும்பான்மையோரின் பொதுப் புத்தியில் ‘சோத்துக்கட்சியே சிறந்தது’ என்கிற எண்ணம் உண்டாகி இருப்பதுதான். இதற்குச் சாட்சி...
தொடக்கத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, எதிர்கட்சியாக விளங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், இன்றைய தேதியில் விரல்விட்டு எண்ணும் நாடாளுமன்ற உறுப்பினர்களையே கொண்டிருக்கிறது.
மே தினம் என்பது ‘உழைப்பாளர்கள் - பாட்டாளிகள் - தொழிலாளிகளின் உரிமையை மீட்டெடுத்த நாள்` என்பது மாற்றமடைந்து, அது ஒரு விடுமுறை தினம் என எண்ணும் போக்கு நிலவுகிறது.
உண்மையில், மே தினம்... உழைப்போர் சீதனம்.