தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: துரைமுருகன் கவலை

1 mins read
763c1f87-6a81-4dcd-9644-e6eb2f129f0b
காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன். - படம்: ஊடகம்

காட்பாடி: லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறி வருவது அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவக்க விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பு திட்ட முகாமை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தேமுதிக தலைவர் பிரேமலதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வரை சந்தித்தது குறித்தும் இது கூட்டணியாக மாற வாய்ப்பு உள்ளதா இதன் பின்னணி என்ன என்று கேட்டதற்கு, “பின்னணியும் இல்லை முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்தார்கள், அவ்வளவுதான்,” என்றார்

பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேரை தமிழகத்தில் வாக்காளர்களாகச் சேர்க்க வாய்ப்புள்ளதாக வெளியாகி உள்ள தகவல் குறித்து கேட்டதற்கு, “அவர்களுக்கு அவர்கள் ஊரிலேயே வேலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டார்கள். பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என நீக்கிவிட்டார்கள். அந்த மாதிரி தமிழ்நாட்டில் செய்ய முடியாது. இந்தப் பிரச்சினையை தலைவர்கள் தான் அணுக வேண்டும்,” என்றார்.

வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது வரும் காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்