மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆவணங்கள், ஆகமச் சான்றுகள், நிர்வாகிகள் கருத்துகளின் அடிப்படையில், கார்த்திகை மகா தீபம் வழக்கமாக ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் ஏற்றப்பட்டது எனக் கோவில் நிர்வாகம் அதிகாரபூர்வ விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்துக் கோவில் துணை ஆணையர் செல்வி, அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகசுந்தரம், அறங்காவலர்கள் ராஜபாண்டியன், அழகப்பன், ரெஜினாதேவி, சித்ரா ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தொன்மையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள், பூசைகள், கார்த்திகை தீபத் திருவிழா ஆகியவை தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் சமய மரபுகள், ஆகம விதிகளின்படியே நடத்தப்படுகின்றன என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரபுப்படி, மலைமேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுவது நீண்டகாலத் தொடர்ச்சியான வழக்கமாகும்.
வரலாற்றுத் தொடர்ச்சி, சமய முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், நிர்வாகிகளின் கருத்துகளை ஆய்வு செய்த அறங்காவலர் குழு, வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றவும் இம்மரபுகளை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) மாலை 6 மணியளவில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டிருந்ததாக ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும், தீபத்தூணில் தீபம் ஏற்ற இயலாது என அறங்காவலர் குழு தீர்மானித்ததால் அங்கிருந்த தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்றும் இதற்குக் கோயில் நிர்வாகமும் அறங்காவலர் குழுவுமே காரணம் என்றும் அவர் கூறியதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவித்தது.
300 பேர்மீது வழக்குப் பதிவு
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றக் கோரி நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, மதுரை காவல்துறை 300 பேர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், வழக்கமாக மகா தீபம் ஏற்றப்படும் இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டதே தவிர, தூண் பகுதியில் ஏற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து, பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தியபோது, அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை நிறைவேற்றாத தமிழக அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் ராம ரவிக்குமார் என்பவர் முறையிட்டுள்ளார்.
