நாமக்கல்: நிலவில் நிலம் வாங்கித்தருவதாகக் குறிப்பிட்டு வெளியான விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்துள்ளார் நாமக்கல்லைச் சேர்ந்த இளம் பொறியாளர்.
சரவணன் (32 வயது) என்ற அந்தப் பொறியியல் பட்டதாரி தனது திருமணத்தை முன்னிட்டு, நிலவில் நிலம் வாங்க ஆசைப்பட்டுள்ளார். தனது வருங்கால மனைவிக்குத் திருமணப் பரிசாக அந்த நிலத்தை வழங்க வேண்டும் என்பது அவரது ஆசை.
இதையடுத்து, ஓர் இணையத்தளத்தின்மூலம் ரூ.23,000 செலுத்திய அவருக்கு, ‘சந்திரயான்’ விண்கலம் நிலவில் தரையிறங்கிய ‘ஸ்டேடியா சிவ சக்தி’ பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, அதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டன.
அதன்பிறகே தாம் ஏமாற்றப்பட்டிருப்பது சரவணனுக்குத் தெரியவந்தது. இது முற்றிலும் திட்டமிடப்பட்ட ஏமாற்று வேலை எனத் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 1967ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக விண்வெளி ஒப்பந்தத்தின்படி, நிலவு உள்ளிட்ட விண்வெளிப் பொருள்கள் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது தனியார் அமைப்பிற்கோ சொந்தமானதாக உரிமை கொண்டாட முடியாது. விண்வெளி என்பது மனிதகுலம் முழுமைக்குமான பொதுவான சொத்து.
எனவே, நிலவில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி விளம்பரம் செய்யும் போலி இணையத்தளங்களை நம்பி பொதுமக்கள் தங்கள் பணத்தை இழக்க வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


